×

தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம்: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஏல பட்டியலை ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் (மார்ச்) 29-ம் தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்று இருந்தன.அதாவது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று இருந்தன.

இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த இடத்தில் விவசாய பணிகளை தவிர வேறு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது, இந்த இடங்களில் எப்படி நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொள்ள முடியும்? என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பட்டியலில் இருந்து தமிழ்நாடு பகுதிகளை நீக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்க கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஒன்றிய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட ஏல பட்டியலிலிருந்து 3 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஏல பட்டியலில் தமிழ்நாடு பகுதிகளை தவிர நாடு முழுவதும் 98 இடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. காவிரி டெல்டா பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அறிவியியல் இயக்கம் வரவேற்பு அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம்: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Union Coal Ministry ,CHENNAI ,Tamil Nadu ,Union… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...